தமிழ் வரலாற்று புதிர்கள் - ராஜமாணிக்கம்
புதிர்கள் மீது நம் அனைவருக்கும் பெரும்
விருப்பம் இருக்கும். புதிர்களை அறிய நம் மனம் ஆவலோடு கூடிய அறிவாற்றலை செலவிடும்.
வரலாற்று ஆய்வில் இருக்கும் சுவாரஸ்யமே நிகழ்வை நாம் ஊகிப்பதில் அடையும் குதூகலமே.
அந்த ஊகங்கள் பின்னாளில் பிழையாக திரும்புவதும், பொருள் மயங்கி காட்சி தருவதும்
நமக்கே சுவாரஸ்யமாக இருக்கும் . தமிழ் வரலாற்றாய்வில் அப்படி நடந்துள்ள சில
சுவாரஸ்யமான புதிர்களையும், புதிர் விடுவிப்பு தவறாக மாறி தற்போது பொருள் விளங்கி
வருவதுமான சில நிகழ்வுகளை பார்க்கலாம். பண்பாட்டு புதிர்கள், கலாச்சார புதிர்கள்
போலவே சுவாரஸ்யமானவை மொழி புதிர்கள், கல்வெ ட்டு புதிர்கள். அதோடு ambiguity உள்ள
வரலாற்று நிகழ்வுகளை ஊகங்கள் மூலம் கருது கோளாக வைக்கப்படும் நிகழ்வு என்று 3
பகுதிகளாக பார்ப்போம்.
1. மொழிப்புதிர்
மிக மெல்லிய கோடு தான் வரலாற்று செய்தியை whit, pun, ஆக ஆகாமல்
word play ஆக நமக்கு தெரிய வைக்கிறது.
மேலே உள்ளது தமிழின் தொன்மையான மாங்குளம் கல்வெட்டு “ கணி
நந்தஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்து காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸிதன்
என்பவன் உறைவிடம் அமைத்து கொடுத்தான் “ என்பது செய்தி . 6 கல்வெட்டு அறிஞர்களும்
அதை எப்படி வெவ்வேறு விதமாக படித்து பொருள் சொல்லி இருக்கிறார்கள் என்று
பார்க்கவும். இந்த 6 செய்திகளும் சுமார் 70 ஆண்டுகளில் நிகழ்ந்தவை.
கணிரன் என்றும் கரணிர என்றும் 1920 களில் இந்த கல்வெட்டை படித்த
கிருஷ்ண சாஸ்த்திரியும், சுப்ரமணிய அய்யரும் அதை ஊர் பெயராகவும், காரணப்பெயராகவுமே
ஊகித்தனர் . ஆனால் ஐராவதம் மகாதேவன், நாகசாமி ஆகியோர் கணி என்றும் இது கணியன்
என்பதன் சுருக்கம் என்றும் தெளிவு படுத்துகிறார்கள். இந்த நந்த ஸிரிகுய்வன்
தொடர்ச்சியாக மாங்குளம் கல்வெட்டில் இடம் பெற்றிருப்பதை பாருங்கள்.
இதற்கு முன்பு இந்த கல்வெட்டின் முக்கியத்துவம், யாருக்காக யார்
கொடுத்தது என்பதெல்லாம் புகை மூட்டமாக இருந்தது . இப்போது இது சமண முனிவர்களுக்கான
படுகையா? ஆசீவக மெய் நாட்டம் உடையவர்களுக்கான படுகையா? என்ற சர்ச்சை நடைபெறுகிறது.
கணியர்கள், சிழிவர்கள் கொடுக்கும் அதிட்டானங்கள், படுகைகள் பற்றிய செய்திகள்
பின்னர் தான் தெரிய வருகிறது.
இரண்டாம் உதாரணம் குன்றக்குடியில் உள்ள இந்த கல்வெட்டு தலைகீழாக
பதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் மொத்தம் 14 எழுத்துக்கள்...
" ஏம ஊர சிழாவான அதான தயன."
கல்வெட்டியல் அறிஞர்கள் இதை ஐந்திற்கும் மேற்பட்ட வடிவங்களில் வாசித்துள்ளனர்..
முதல் இரண்டு எழுத்து..
ஏம....
எம்.....
இரண்டு வடிவிலும் எழுதலாம்..
3 & 4 ஆம் எழுத்துக்கள் ஊர் என்று எழுதலாம்..
6 வது எழுத்து ஒரு வேளை படுக்க்கைகோடு மேல்நோக்கி இருந்திருந்தால்..
அதாவது ... ழி..
சிழிவான்...
சிழிவான..
சிழிவன்...
என்று யூகிக்கலாம்..
9 & 10 & 11..
அதான..
அதன்...
யூகிக்கலாம்..
12 & 13 & 14..
தயன....
த..படுக்கைக் கோடு மேல்நோக்கி நீண்டிருந்தால்..
தி..
அதாவது... தியன்...
இந்த தியன் என்ற சொல் வேறு பல கல்வெட்டுக்களிலும் கிடைக்கிறது...
தமிழகத் தொல்லியல் துறை இவ்வாறாக முடிவு செய்து ... பதிப்பித்துள்ளது...
" எம் ஊர் சிழிவன் அதன்தியன்.."
இச்சொல்லும் ஒரு யூகத்தில்தான் முடிவு செய்துள்ளார்கள்..
உங்கள் நெருக்கமான யூகம்கூட சரியாக இருக்கலாம்..
ஒரு முக்கியமான விடயத்தை நினைவு கொள்ளுங்கள்..
உங்கள் யூகம் மிக மிக நெருக்கமாகவும் , சாத்தியமான ஒன்றாகவும்.. இருக்கவேண்டும்..
மேலும் சில கல்வெட்டுகளை வாசித்து எழுதும்போது மேலும் தெளிவு பெறலாம்..
காபி ஊர் ஆதன் சாத்தன் எனும் கல்வெட்டு வாசகத்தை ஊபி ஊர் அதன்
சாத்தன் என்று துவங்கி தெலுங்கு , பிராகிருத கல்வெட்டாக இருக்குமோ என்பது வரை
பல்வேறு சாத்தியக்கூறுகள், கருதுகோளாக நாளிதழ்கள் , பல்கலைகழகங்கள் முதல்
கல்வெட்டு ஆய்வறிக்கை வரை பல ஊகங்கள். இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட ஆண்டு 1906.
சரியான பொருள் வரும் எழுத்துக்கள் 1970 களில் தான் சாத்தியமானது.
அடுத்து பழமையான கல்வெட்டுக்களில் உப்பு வணிக வழி, பட்டு வணிக வழி
ஆகிய பகுதிகளில் உள்ள பழமையான கல்வெட்டுக்களில் காணப்படும் குறியீடுகள், வணிக
குலக்குறி சின்னங்கள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் சிலவற்றை
பார்ப்போம். கொங்கர் புளியகுளம், வரிச்சியூர் கல்வெட்டுக்களில் காணப்படும் பொன்
வணிகர்கள், உமணர்களுக்கான குலக்குறிகள் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்கள்.
இதே போல எண்கள் குறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள்
ஒ, சித்திர வடிவங்கள் உள்ள செப்பேடுகள் என்று நாம் அறியாத
வரலாறையும் வாழ்க்கையையும் தன்னுள் புதைத்து கொண்டு ஒரு மர்மப்புன்னகையையும்
சவாலையும் நம்மை நோக்கி வீசி
விட்டு காத்திருக்கிறது வரலாறு.
சரியான புதிர் ஊகிப்பாளருக்காக 2300 ஆண்டுகள் காத்திருந்த தமிழ் முத்திரை.
இலங்கையில் கண்டறியப்பட்ட ஆனைகோட்டை முத்திரை கிமு 3 ஆம் நூற்றாண்டை சார்ந்தது.
வட்ட வடிவ உலோக முத்திரை.
ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு
முத்திரை ஆகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி
ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக
இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது
தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன.
பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து
பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த
உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி
(1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார்.
ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால்
ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது
என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில்
எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார்.
முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று
அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம
எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும்
காணப்படுகிறது. மற்றைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.
இலங்கையின் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலத்
தமிழ்-பிராமி கல்வெட்டு
கண்டுபிடிப்பின் பின்னணி
பொ. இரகுபதியின் முனைவர் பட்ட ஆய்வுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில்
1980களின் தொடக்க ஆண்டுகளில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின் போது
கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் களங்களில் ஆனைக்கோட்டை தொல்லியல் களமும் ஒன்று[1].
இங்கே காணப்பட்ட பெருங்கற்காலத் திட்டுக்கள் பல அயலில் உள்ள தாழ்வான பகுதிகளை
நிரப்பி வீடமைக்கும் திட்டத்துக்காக மண் அள்ளப் பட்டதனால் குழப்பப்பட்டு இருந்தது.
பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வுக்கொடை
மூலம், அப் பல்கலைக் கழகத்தின் வராலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில்
அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பேராசிரியர். கா. இந்திரபாலா, பேராசிரியர். எஸ். கே.
சிற்றம்பலம், முனைவர். பொ. இரகுபதி ஆகியோர் பல்கலைக் கழக மாணவர்களின் உதவியுடன்
இந்த ஆய்வுகளை நடத்தினர்[2]. இங்கே ஒரு அடக்கக் குழியும் பல தொல் பொருட்களும்
கண்டுபிடிக்கப்பட்டன. அடக்கக் குழிக்குள் காணப்பட்ட எலும்புக்கூட்டின்
மண்டையோட்டுக்கு அருகில் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் காணப்பட்ட பொருட்களுள்
"ஆனைக்கோட்டை முத்திரையும்" ஒன்று. இந்த அகழ்வாய்வின் போது கிடைத்த
பொருட்களுள் ஆர்வத்தை மிகவும் தூண்டிய பொருளும் இதுவே.
இந்திரபாலாவின் வாசிப்பு
ஆனைக்கோட்டை முத்திரையின் அண்ணளவான ஒரு புறக்கோட்டு வடிவம்
இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ்
வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும்
எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில்
இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது
"வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு
ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை
"கோ" "வே" "த" என்று அமையும். "த" வின்
மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது
"கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார்.
இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன.
"கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப்
பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன்,
அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது
போலவே அமையும்.
மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம்
பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால்
"கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த"
அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது[3].
இரகுபதியின் வாசிப்பு
பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர்,
இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட
புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி
"கோ" "வே" "த" என்பது "கோ" +
"வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும்
பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ"
"வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும்
பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்[4].
மதிவாணனின் வாசிப்பு
முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில்
காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என
வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.[5]
இதே போல இன்னொரு வட்ட வடிவ கல்வெட்டு பல்வேறு மொழி சாத்தியத்திலும்
முயற்சி செய்யப்பட்டது. பிராமி கல்வெட்டுக்களில் ஒரு தனித்த நடையை உடைய
பொட்டிபுரேலு கல்வெட்டு தான் அது.
இலக்கியத்தில் சொல் மயக்கம், பொருள் மயக்கம் எப்படி சுவையை
கூட்டுகிறதோ அது போலத்தான் கல்வெட்டிலும் . Ambiguity அதிக சாத்தியத்தை யோசிக்க
வைப்பதை காணலாம். அப்படி ஒரு சுவாரஸ்யம் பொட்டிபுரேலு கல்வெட்டை முன்வைத்து
சொல்லலாம். இது தொடர்பாக நூற்றாண்டுகளாக நடைபெற்ற வாத விவாதங்கள் இன்றைக்கும்
சுவாரஸ்யமாக இருப்பதை காணலாம். பிராமி ரொஸேட்டா எனப்படும் பொட்டிபுரேலு
கல்வெட்டும் அதன் பாட பேதங்களும் மிகவும் சுவாரஸ்யமானவை.
பொட்டிபுரேலு கல்வெட்டு 1968ல் தமிழ் பிராமி என கண்டறியப்படும் வரை
தெலுங்கு, கன்னட கல்வெட்டுக்களாக சொல்லப்பட்டிருந்தது. இடையில் பிராகிருத
கல்வெட்டாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்த பொட்டிபுரேலு கல்வெட்டு சொல்லும்
செய்தியை பல நூறு ராபர்ட் லேங்டன் கள் விளக்குவது போல நம் வரலாற்று ஆய்வாளர்கள்
பலரும் விவரித்திருக்கிறார்கள். தெலுங்கு, கன்னட , பிராகிருத கல்வெட்டாகவும்
படிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமி கல்வெட்டு. புத்தரின் வாக்கியங்கள் அடங்கியது.
பெளத்த ஆப்த வாக்கியங்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை பொறிப்புகள்
https://www.livehistoryindia.com/story/monuments/bhattiprolu-stupa
தமிழர்களிடம் இருக்கும் நீண்ட கால சர்ச்சை காரவேலனின் ஹாத்திகும்பா
கல்வெட்டில் இருப்பது ஆயிரம் ஆண்டு கூட்டணியா? அல்லது 113 ஆண்டுகள் நீடித்த
மூவேந்தர்களின் கூட்டமைப்பா? என்ற ஆய்வு
இந்த சொல் மயக்க , பொருள் மயக்க கல்வெட்டு பொது ஆண்டுக்கு முன்பான
172 ஆம் ஆண்டு காரவேலர் எழுதிய ஹாத்திக்கும்பா கல்வெட்டு. தேராவஸ சத என்பதை 1130
ஆண்டு என்றும் 113 ஆண்டு என்றும் படித்து பொருள் கொண்ட சர்ச்சை நூற்றாண்டுகளுக்கு
மேல் தொடர்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் எது என அறியும் புதிர். இன்னும் ஒரு புகழ்பெற்ற
சர்ச்சையோடு தொடர்வோம். ராஜராஜனின் மெய்கீர்த்தி சொல்லும் காந்தளூர் சாலை
களமறுத்தருளியில் வரும் காந்தளூர் எது என்பது பற்றி சர்ச்சை நீலகண்ட சாஸ்த்திரி
காலத்தில் இருந்து ராமச்சந்திரன் சார் வரை பல அறிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். அதே
அளவு சர்ச்சை ஆனால் பெரிய அளவில் பொது வெளியில் அறியப்படாத சர்ச்சை கடாரம்
கொண்டான் எனும் பட்டப்பெயருடைய ராஜேந்திரன் வென்ற கடாரம் மலேசியாவில் உள்ள கெடா வா
? பர்மாவில் உள்ள பெகு வா என்ற சர்ச்சை பற்றி ஒரு சிறு அறிமுகம்
இராஜேந்திரன் கடாரத்தை வென்று அங்கே தனது மெய்கீர்த்தியுடன் கூடிய
வெற்றித்தூண் நட்ட குறிப்புகள்...
இராஜேந்திரசோழன் நூல்..
ம.இராசசேகர தங்கமணி.
பக்.140, 141, 142.
--------------------------------
ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் குறிக்கப்பெற்றுள்ள 'கடாரம்'
என்னும் நாடு யாங்குள்ளது? என்ற வினா வரலாற்று அறிஞர்கட்கும், புவியியல்
வல்லுநர்கட்கும் பெரும்புதிராக அமைந்துள்ளது. ஏனெனில், ராஜேந்திரனது
மெய்க்கீர்த்தியில் 'பப்பாளம்' என்னுமிடத்தை வெற்றி கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள
பகுதி பர்மாவிலுள்ள 'தலைங்' பகுதியிலுள்ளதொரு துறைமுகப்பட்டினமென்று 'மகாவம்சம்'
குறித்துள்ளது. எனவே, ராஜேந்திரன் வென்ற கடாரம் பருமாநாட்டிலுள்ள பெகு என்னும்
பகுதியாகும் என்று வரலாற்றறிஞர் திரு. வெங்கையா குறிப்பிடுகின்றார்.
சில ஆண்டுகள் கழித்துப் பர்மா நாட்டின் பழம்பொருள் பாதுகாப்புத்
துறையினர் பெரு நாட்டை ராஜேந்திரசோழன்
கி.பி. 1026-1027இல் வென்றதாகக் குறிக்கப்பட்டிருக்கும்
வெற்றித்தூண்கள் பெகுநாட்டில் காத்து கிடப்பதாக
அறிவித்திருந்தனர். ஆராய்ச்சி அறிஞர் பலர் ராஜேந்திரன்
மெய்க்கீர்த்தியில் குறித்துள்ள கடாரவெற்றி, பரமாவெற்றி தான் என்று
உறுதிகொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருப்பொருட் களஞ்சியத்திலும்
(Trichirapoly District Gazetteer) கடாரம் என்பது கீழ்ப்பருமா எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது, திரு, கனகசபைப் பிள்ளையவர்களும்
இக்கருத்தினையே வலியுறுத்துகின்றார்,
திரு. எம். எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை அவர்கள் 'தமிழ் இந்தியா
என்னும் நூலில், கடாரம் என்பது பர்மாவிலுள்ள பகுதி 'என்று குறித்துள்ளார்.
திரு. அ. சிதம்பரனார் அவர்கள் முதலாம் ராஜேந்திரன் பர்மாவை வென்று,
'பெகு' என்னும் இடத்தில் ஒரு கற்றூணில் சாசனம் வெட்டுளித்துப் பெரிய கோர்ட்டுக்கு
முன்னால் நாட்டியுள்ளான். அக்கற்றூண் இன்றும் நின்று நிலவுகிறது. அதற்கு அடுத்த
ஆண்டில், அதாவது கி.பி. 1027இல் திருவாரூருக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவில்
உள்ள 'கடாரங்கொண்டான்' என்னும் கிராமத்தை நிர்மாணம் செய்து பர்மா வெற்றியைக்
கொண்டாடியுள்ளான். என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத் தமிழாராய்ச்சி மலரில்
குறித்துள்ளார்.
இலக்கண விளக்கப் பரம்பரை திருவாரூர் சோமசுந்தர தேசிகர் அவர்கள்
பர்மா தேசத்திலுள்ள பெகு நாட்டிற்குக் கடார தேசமென்று பெயருண்டு' எனச் செந்தமிழ்'
எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞரும், கரந்தைத் தமிழ்க் கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியருமான திரு. சி. கோவிந்தராஜன் அவர்கள் ‘பர்மாவிலுள்ள பெகு என்னும்
பகுதியில் முதல் ராஜேந்திரன் நாட்டிய வெற்றித் தூண்கள், தமிழ்க்
கல்லெழுத்துக்களுடன் இருப்பதை அந்நாட்டுக் கல்வெட்டுத்துறை அதிகாரி 'டோசையின் கோ'
குறிப்பிட்டுள்ளதை அறிகிறோம். மற்றும் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குத்
திரும்பியுள்ள அறிஞர் சிலரிடம்
பெற்ற செய்திகளும், பருமாவை முதல் ராஜேந்திரன் வென்ற வரலாற்றினை
உறுதிப்படுத்துகின்றன.
இவற்றால் கடாரம் என்பது பர்மாவிலுள்ள கடற்கரைப் பட்டினமும் அதைச்
சார்ந்த பகுதிகளும் ஆகும் என்று குறிப்பிடும் கருத்து வலியுறுகின்றது.
ஆனால், இது வரையில் வெளிவந்துள்ள சோழர் வரலாறுகளில் ராஜேந்திரனுடைய
கல்வெட்டு, செப்பேடுகளைக் கொண்டு ஆய்ந்த முடிவாகக் கடாரம் என்பது மலேயாத்
தீபகற்பத்திலுள்ள 'கெடா' என்னும் பகுதியேயென்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
பர்மாவிலுள்ள முதல் ராஜேந்திரன் அமைத்த வெற்றித் தூண்களில் உள்ள
கல்வெட்டுச் செய்தியினை முழுமையாகப் பெறுவோமானால், எது கடாரம் என்பதில் உள்ள ஐயம்
நீங்குவதற்கு ஏதுவாகும். என்று கல்வெட்டுக் கருத்தரங்கு என்னும் வெளியீட்டில்
'தமிழ்க் கல்வெட்டாராய்ச்சியும் தமிழக வரலாறும்' என்னும் கட்டுரையில் எழுதியுள்ளனர்.
மறைந்துபோன வெற்றித்தூண்களைப்பற்றி பிரிட்டிஷ் நூலகம் சில
தகவல்களைத்தருகிறது .
அந்த வெற்றித்தூண்கள் பர்மாவின் தனப்பின் சாலையில் இருந்து
அகற்றப்பட்டு 1907-08 இல் அருகில் இருந்த சர்க்கூட் ஹவுஸ் எனும் அரசினர்
விருந்தினர் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டதாக தெரிகிறது . அந்த செய்திகைத்தான்
சிங்கப பூர் தினசரி 1909 இல் வெளியிட்டது என்கிறது .
அந்தவெறுத்தொங்களின் புகைப்படம் , மாதிரி ஆகியவை அப்போதைய
பர்மாவின் தொல்லியல் அதிகாரி டா சின் கோ என்பவற்றின் ஆணையின்படி
ஆவணப்படுத்தப்பட்டதாகத்தெரிகிறது .
அனால் அவை அத்தனையும் இப்போது அங்கு இல்லை , புகைப்படங்களின்
நகலும் இல்லை , வெற்றித்தொங்களும் மாயமான வழித் தெரியவில்லை .
The British Library collection gives details that Jayastambha
stone pillar was removed from the Thanatpin road along with a larger pillar and
erected there in 1907-08, within the compound of the Circuit-house in the
background, [Pegu] which was in the garden, the circuit-house in the
background. Thus, “The Straits Times” reported in 1909. The photographs,
including views of Burmese architecture, sculpture and relics, were taken under
the direction of the Superintendent, a post held at the time by Taw Sein Ko[.
Now, the whereabouts of the Victory Pillars are not known in
spite of the enquiries made.
இவை எல்லாம் சின்ன சின்ன சுவாரஸ்யம். இன்னும் ஆயிரக்கணக்கான
சுவாரஸ்ய புதிர் கேள்விகளோடு வரலாற்று யட்சி நம் போன்றோரின் வருகைக்காக தவம் இருக்கிறாள்.
நன்றி









Comments
Post a Comment