இந்திய தத்துவங்கள், தரிசனங்கள் ஒரு ஒப்பீடு - தாமரைக்கண்ணன்
ஒரு தரிசனத்தை
அல்லது தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள அது உலகம் (பிரபஞ்சம்), உயிர் (ஆன்மா), கடவுள்
ஆகிய மூன்றைப் பற்றியும் என்ன சொல்கிறது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என
‘இந்திய தத்துவ ஞானம்’ நூலில் கி. லக்ஷ்மணன் குறிப்பிடுகிறார். இந்நூல் இந்திய தத்துவங்கள்,
தரிசனங்கள் பற்றிய அறிமுக நூல். ஒவ்வொரு தரப்பும் ஒன்றுடன் ஒன்று எப்படி ஒத்திருக்கின்றன,
எங்கு வேறுபடுகின்றன என்பதையும் இந்நூலில் காட்டுகிறார். மேலும் அவை ஒவ்வொன்றும் உலகம்,
உயிர், கடவுள் ஆகியவற்றை பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டிக்கொண்டே
செல்கிறார். இங்கு நாம் பார்க்கபோவது இதையே.
இந்த அறிமுகக்
குறிப்பில் இம்மூன்றை பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை மட்டும் அளிக்கிறேன். ஒவ்வொரு
தத்துவத்தரப்பும் எப்படி இந்த முடிவை அடைந்தார்கள் என்பதையும், அதற்கான காரணம் என்ன
என்பதையும் நாம் அரங்கில் காணலாம்.
வேதங்கள்
வேதத்தை பிரமாணமாக
ஏற்றுக்கொண்ட வைதீக தரப்புகளுக்கும், அதை மறுத்து எழுந்த அவைதீக தரப்புகளுக்கும் வேதங்கள்
ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளன. ஆகவே உலகம், உயிர், கடவுள் பற்றி வேதத்தில் என்னென்னெ
சொல்லப்பட்டுள்ளன என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
1.கடவுள்
வேதத்தில்
கடவுள் என்பது பரிணாமம் அடைந்துகொண்டே செல்வதை நாம் காணலாம். வேதங்களின் தொடக்க பாடல்களில்
பல தெய்வங்கள் வருகின்றன. இது பலதெய்வவாதம் (Polytheism). பின்பு படிப்படியாக இந்த
நிலை மாறி ஒரேயொரு தெய்வமே முழுமுதல் தெய்வம் என்ற வடிவத்திற்கு வருகிறது. இது ஒருதெய்வவாதம்
(Monotheism). பிறகு செல்லச்செல்ல தெய்வம் என்ற சொல் கைவிடப்பட்டு
எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளது ஒன்று என்ற கொள்கைக்கு வருகிறது. இது மொனிசம்
(Monism). சத், தத் என்ற சொற்களால் அது குறிப்பிடப்படுகிறது.
2.ஆன்மா
ஆன்மாவை பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் வேதத்தில் இருந்து வந்தவையே.
- ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் ஒரு ஆன்மா
உள்ளது.
- ஒருவன் இறந்து பிறகு அவன் செய்த கர்மங்களின்
பயனால் அவனது ஆன்மா சொர்கத்திற்கு செல்லும், அல்லது நரகத்திற்குச் செல்லும்.
ஆனால் வேதங்களில் மறுபிறப்பு பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை. முற்பகுதியாக
மந்திரங்களில் மறுபிறப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. பிற்பகுதியாகிய பிராமணங்களில்
மட்டுமே சில குறிப்புகள் உள்ளன. இவையே மறுபிறப்பு கொள்கைகள் பிற்காலத்தில் விருத்தியடைந்து
நிறைவு பெறுவதற்கு ஆதாரமாயின. மறுபிறப்பு போன்ற சில கருத்துக்களில் பிற்கால கொள்கைகள்
சில வேறுபட்டுள்ள.
3.உலகம்
(மற்றும் படைப்பு)
உலகம் உண்மை என்பதே வேதத்தில் காணப்படும் கருத்து. உலகம் உண்மையல்ல என்ற கருத்து வேதத்தில் எங்கும் காணப்படவில்லை.
ஆனால் உலகம் எதிலிருந்து தோன்றியது என்பது பற்றி வேதத்தில் பல கருத்துக்கள் உள்ளன.
அவற்றில் இரண்டை மட்டும் உதாரணத்திற்காக தருகிறார் கி. லக்ஷ்மணன்:
- உலகம் நீரிலிருந்து தோன்றியது,
நீரே அனைத்திற்கும் ஆதாரம், அதிலிருந்தே நிலம், காற்று, நெருப்பு ஆகியவை தோன்றின.
இது கி.மு. 6-ல் வாழ்ந்த மேற்கு தத்துவவாதி தேல்ஸ்சின் கருத்துடன் ஒத்துள்ளது.
- அறிவுடைய
ஒருவனே இந்த உலகத்தின் தோன்றுவதற்கு காரணமானவன். அவன் எதிலிருந்து உலகை உருவாக்கினான்?
இந்த கேள்விக்கு இரண்டு வித பதில்கள் உள்ளன:
- அவன் ஜீவன் உள்ள தன்னிடம் இருந்தே
ஜடமான இந்த உலகத்தை உருவாக்கினான் என்பது முதல் பதில். இது இறைவனுக்கு புறம்பான
எதுவும் கிடையாது, அவனே உலகாகவும் தோன்றுகிறான் என்ற சங்கர வேதாந்திகளின் கொள்கைக்கு
சார்பானது
- ஜீவன் உள்ள அவன் ஜடமான இந்த உலகத்தை ஜடமான புறப்பொருளில்
இருந்து உருவாக்கினான் என்பது இரண்டாவது பதில். இது இறைவன் மாயை என்ற மூலப்பொருளில்
இருந்து இந்த உலகைப் படைத்தான் என்ற சைவ சித்தாந்திகளின் கொள்கைக்கு சார்புடையது.
அறிதல் முறைகள்
ஒரு தரிசனம்
அல்லது தத்துவம் எந்தெந்த பிரமாணங்களை ஏற்றுக்கொள்கின்றன என்பதை கொண்டுதான் உலகம்,
ஆன்மா, இறைவன் பற்றிய அதன் கொள்கைகளும் இருக்கும்.
- பிரத்யக்ஷம் மட்டும் - லோகாயதம்
- பிரத்யக்ஷம், அனுமானம் - வைசேடிகம், பெளத்தம்
- பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி - சாங்கியம், சைவம்
- பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி, உபமானம் - நியாயம்
- பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி, உபமானம், அர்த்தாபத்தி - பிரபாகர மீமாச்சை
- பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி, உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி - பட்ட
மீமாச்சை, வேதாந்தம்
பொது ஒப்பீடு
உலகம், ஆன்மா,
கடவுள் பற்றிய பொது ஒப்பீடு.
1.மூலப்பொருள்
ஒவ்வொரு தரிசனமும் இந்த உலகம் (பிரபஞ்சம்) எப்படி தோன்றியது (அல்லது படைக்கப்பட்டது)
என்பதை விளக்குகின்றன. எதிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றியது (அல்லது படைக்கப்பட்டது),
அதற்கான மூலப்பொருள் என்ன என்பதையும் சொல்கின்றன.
அந்த மூலப்பொருள் ஒன்றா, இரண்டா, பலவா என்பதை வைத்து ஒரு புரிதலுக்காக இவ்வாறு
வரிசைப்படுத்தலாம் என்கிறார் கி. லக்ஷ்மணன்:
- மூலப்பொருள் என எதுவும் இல்லை
- பெளத்தம்
- மூலப்பொருள்
ஒன்று - வேதாந்தம்
- மூலப்பொருள்
இரண்டு - சாங்கியம்
- மூலப்பொருள்
மூன்று - சைவசித்தாந்தம்
- மூலப்பொருள் பல - வைசேஷிகம், நியாயம்
2.உலகம்
உலகம் (பிரபஞ்சம்) எப்படி தோன்றியது என்பதை பற்றி ஒவ்வொரு பிரிவும் என்ன சொல்கின்றன
என்பதைப் பார்க்கலாம்:
●
உலகாயதம் - நிலம்,
நீர், காற்று, நெருப்பு ஆகியவை இணைந்து உருவானதே உலகம்
●
சமணம் - சீவன் அசீவன் இரண்டுமே
நித்தியமானவை. எனவே அசீவனான உலகம் படைக்கப்படாத உண்மையான ஒரு பொருள்.
●
பெளத்தம் - சதா
நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓட்டத்தாலும் மாற்றத்தாலும் ஆனதே இப்பிரபஞ்சம்.
●
சாங்கியம், யோகம் - முக்குணங்களையும் கொண்டுள்ள பிரக்ருதியே
இவ்வுலகின் தோற்றத்திற்கு காரணம். இவ்வுலகம் போய் ஒடுங்குவதும் அதில் தான்.
●
வைசேஷிகம் - ஒன்பது திரவியங்களே இவ்வுலகின் தோற்ற ஒடுக்கங்களுக்கு
காரணமானவை. - நிலம், நீர், காற்று, தீ, ஆகாசம் காலம், இடம்,
ஆன்மா, மனம். இவற்றில் முதல்
நான்கை அணுக்களாக பிரிக்க முடியும். இந்த அணுக்கள் இணைந்தே இந்த உலகம் தோன்றியது
●
நியாயம் - வைசேஷிகம் சொல்லும் அணுக்கோட்பாட்டை நியாயம் ஏற்றுக்கொள்கிறது.
உலகிற்கு மூல காரணமான பொருள்களைப் பற்றி இருவருக்கும் இடையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.
அவற்றை பாகுபாடு செய்யும் முறையில் மட்டுமே சில வேற்றுமைகள் உள்ளன
●
பூர்வ மீமாம்சம் - உலக தோற்றத்திற்கு காரணம் அணுக்கள்.
ஆனால் இந்த அணுக்கள் நியாய வைசேஷிகத்தின் அணுக்கள் போல கண்களுக்கு புலனாகாதது அல்ல.
பருமன் அற்றது அல்ல. இவை கண்களுக்கு புலனாகக்கூடியவை.
3.ஆன்மா
ஒவ்வொரு தத்துவ பிரிவும் ஆன்மா என்றால் என்ன என்பதை தனக்கே உரித்தான முறையில்
வகுத்துள்ளன. அதை கீழ்கண்டவாறு பிரிக்கலாம் என்கிறார் கி. லக்ஷ்மணன்.
- ஆன்மா என்பது உடலில் ஏற்ப்படும் ஒரு விளைவு. உடலைக் கடந்து
ஆன்மா என்ற ஒன்று இல்லை - லோகாயதம்
- உடலைக் கடந்த வேறொன்று ஆன்மா. இதிலும்
இரு பிரிவுகள் உள்ளன:
- ஆன்மா நிலையானது அல்ல, மாறி மாறி
நிகழும் உணர்வுகளின் கோர்வையே ஆன்மா - பெளத்தம்
- மாறி மாறி நிகழும் உணர்வுகளின்
கோர்வையை கோர்த்து நிற்கும் ஒன்றே ஆன்மா. அப்படியென்றால் அதன் உண்மை இயல்பு என்ன?
இந்த கேள்வியால் மேலும் இரண்டாக பிரிகிறது:
- அறிவே ஆன்மா. ஆன்மா வேறு அறிவு வேறல்ல - வேதாந்தம்
- ஆன்மா நிலையானது. ஆன்மா குணி,
அதன் குணம் அறிவுடைமை. அறிவு வேறு, அதை கொண்டுள்ள ஆன்மா வேறு - நியாயம், வைஷேசியம், சமணம், சாங்கியம், யோகம். (ஆனால் அறிவு என்பது ஆன்மாவின்
குணம் அல்ல, தொழில் என்பவர்கள் பூர்வ
மீமாம்சகர்கள்)
முக்தி
ஆன்மாவிற்கும்
அறிவிற்குமான தொடர்பு என்ன என்பதைக் கொண்டே ஒரு தரப்பு முக்தியைப் பற்றி என்ன கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதை அறியலாம்:
- ஆன்மா அறிவே சொரூபமானதெனக் கொள்வோருக்கு அந்த அறிவை மழுங்கச்செய்யும் அறிவுக்கு
அன்னியமான பொருள்களில் இருந்து தன்னை விடுவித்து, சுயம் பிரகாசமான, சைதன்னியமான
தன் சுயரூபத்தை ஆன்மா அடைவதே முக்தியாகும்
- ஆன்மாவும் அறிவும் வேறு எனக் கொள்வோருக்கு, எல்லாவற்றையும் சாரியாக அறிவிக்கவல்ல
முற்றறிவுப் பொருள் எதுவோ அதனைப் பூரணமாக சார்ந்துவிடுவதே முக்தியாகும்
- ஆனால் வைசேஷிகத்தில் ஆன்மா உணர்வு கெட்டு
நிற்கும் நிலையே முக்தி. இந்த உலக வாழ்வின் பாதிப்புகளை தாண்டி சென்ற நிலை (நிஸ்ரேயம்).
4.கடவுள்
கடவுள் என்பதை
ஸ்ருதி பிரமாணம் மூலமாக மட்டுமே அறிய முடியும். பிரத்யக்ஷம் வழியாகவும் அனுமானம் வழியாகவும்
கடவுளை அறியமுடியாது. கடவுள் என்பவன் உள்ளன்னெனின் அவன் வேலை என்ன? அவன் படைப்பவனா?
அல்லது படைப்பிற்கு துணைபுரிபவன் மட்டுமா? கர்மத்தை ஆன்மாவுடன் பினைப்பவனா? முக்தியை
அளிப்பவனா? கடவுள் என்ற ஒன்று இல்லையெனில் உயிர்கள் முக்திடைவது எவ்வாறு? என்பது போன்ற
ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு தரப்பும் தத்தமது பதில்களை அளிக்கின்றன.
கடவுள் என்ற
கொள்கையை முழுக்க மறுப்பவர்கள் மூவர் - உலகாயதம், சமணம், பூர்வ மீமாம்சம்.
●
உலகாயதம் பிரத்யக்ஷம் மட்டுமே ஒரே பிரமாணம் என எற்றுக்கொள்கிறனர்.
இதனால் இவர்கள் கடவுளை நம்மால் புலன்கள் வழியாக அறியமுடியாது, ஆகவே அது இல்பொருள் என்கின்றனர்.
கர்மம், மறுபிறப்பு போன்றவையும் இல்பொருள்களே
●
சமணம் உலகைப் படைக்க கடவுள் தேவையில்லை. அது அசீவனான
சடப்பொருள். அது இருந்துகொண்டே உள்ளது. அது படைக்கபப்டவில்லை
●
பூர்வ மீமாம்சம் - வேதத்தையே முதல் பிரமாணமாக ஏற்றுக்கொண்ட
போதிலும் இவர்கள் கடவுளை முழுமுற்றாக நிராகரிக்கின்றனர். ஏனென்றால் இவர்களுக்கு வேதமே
முதன்மை. அது அபெளருஸ்யம்.
●
சாங்கியர்களும் கடவுளை நிராகரிக்கின்றனர். கடவுள் உலகை
தன்னுடம் இருந்து படைதான், கடவுள் உலகை சூன்பத்தில் இருந்து படைத்தான் என்ற இரு வாதங்களையும்
இவர்கள் தங்களுடைய சத்காரியவாதத்தின் படி நிராகரிக்கின்றனர்
கடவுள் உள்ளான்
என்பதை ஏற்றுக்கொள்ளும் யோகம், நியாயம், வைசேஷிகம் கூட கடவுளின் இயல்பு என்ன தொழில்
என்ன என்பதில் வேறுபடுகின்றனர்.
Comments
Post a Comment