இலக்கியத்தில் அறம் - அந்தியூர் மணி
1.அறம்
எத்தன்மையது (புறநானூறு -192)
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
உலகில் எதுவாயினும் அது வாழத்தக்க ஊர். எல்லா மக்களும்
உறவினர். ஒருவனுக்கு நேரும் தீங்கோ, நன்மையோ பிறர் தந்து வந்தது அன்று. ஒருவன்
வருந்துவதும், வருத்தம் நீங்கித் தணிவதும் அப்படிப்பட்டதுதான். ஒருவன் சாவதும்
புதிது அன்று. எனவே கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழமாட்டேன்.
வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறமாட்டேன். வானம் மின்னி மழை பொழிந்து
கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம் போல
நம் உயிர் மிதந்து ஓடும். இந்த உண்மையைத் திறம்பெற்றவர் வாழ்க்கையில் கண்டு
தெரிந்துகொண்டேன். அதனால் சிறப்புற்று விளங்கும் பெரியோரைக் கண்டு வியக்கமாட்டேன்.
(ஒருவேளை பெரியோரைக் கண்டு வியந்தாலும்) சிறியோரை இகழவே மாட்டேன்.
2.அறவோனின் குணங்கள் (அறநெறிச்சாரம்
-11 )
மெய்ம்மை பொறையுடைமை மென்மை தவம்அடக்கம்
செம்மைஒன்று இன்மை துறவுஉடைமை -நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம்பத்தும் ஆன்ற குணம்
விளக்கவுரை
வாய்மையும், பொறுமையும், பெருமையும் , தவமும்,
அடக்கமும், நடுவுநிலைமையும், தனக்கு என ஒன்று இல்லா திருத்தலும், பற்று அறுதலும், நல்லன
செய்தலும், மாறுபடாத நோன்புகளை மேற்கொள்ளுதலுமான இத்தன்மையான அறங்கள் பத்தும்
மேலான குணங்களாகும்.
3.எத்தகையது அறமல்ல (முதுமொழிக்காஞ்சி- 5)
ஆர்கலி உலகத்து
மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
இல்லாதது கிளைநட்பு அன்று.
சோராக் கையன் சொல்மலை
அல்லன்.
நேரா நெஞ்சத்தோன்
நட்டோன் அல்லன்.
நேராமல் கற்றது
கல்வி அன்று.
வாழாமல் வருந்தியது
வருத்தம் அன்று.
அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று.
அல்லாதது. (ஆகாதது)
கூறும் பத்து மொழிகள்
கடல் சூழ்ந்த உலகில்
உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவியாகாள்.
மனைவியிடம் நல்ல
மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.
ஒருவர்க்கு ஒருவர்
குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.
பிறர்க்கு ஒன்றும்
உதவாத கையையுடைய கருமி, புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.
ஒன்று கலந்து பொருந்தாத
உள்ளம் உடையவன், உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.
ஆசிரியர்க்கு ஓருதவியும்
செய்யாமல், வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.
தான் வளத்துடன்
வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழ முடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம், உண்மையான
வருத்தமாகாது.
அறவழியில் ஈட்டிய
பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.
உரிய முறையில்
நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.
மறுபிறப்பு என்பதை
முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான
பயனுள்ள மூப்பாகாது.
4.அறத்தோனின்
இழிவு எது (புறநானூறு. -72)
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்.
நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
அருஞ்சொற்பொருள்:
1. மீக்கூறல் = புகழ்தல். 2. உளைதல் = மிக வருந்துதல். 3.
படு = பெரிய; இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்; பா = பரவுதல். பணை = பருமை. 6. உறு
= மிக்க; துப்பு = வலிமை; செருக்குதல் = அகங்கரித்தல். 7. சமம் = போர். 8. அகப்படுத்தல்
= சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல். 10. செல்நழல் = சென்றடையும் நிழல். 16.
வரைதல் = நீக்கல். 17 புன்கண் = துயரம்; கூர்தல் = மிகுதல்
உரை: “இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள்
ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து
மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும்,
தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு
அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய
போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன்.
நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள்
சென்றடைய வேறு இடமில்லாமல், “ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து
அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த
கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும்
புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர்
துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான்
அடைவேனாக.
Comments
Post a Comment