ஆனந்த் குமார் கவிதைகள் - நிக்கிதா
மலைமேல்
பறக்கும்
வீடு
அம்மாவின் தலைவலி மருந்தை
இந்த மதியத்தில் யாரோ
திறந்துவிட்டார்கள்
வெக்கையின் காதில் கேட்கிறது
யூக்காலிப்டஸ் மந்திரம்
வியர்த்துக்கிடக்கும்
முதுகில் குளிரேற்றுகிறது
வெறுந்தரை
ஒரு சிறிய காற்றுக்கு
மலைமேலென உயர்ந்துவிட்டது
என் வீடு
…………………..
ராணி
நான் ஒரு எளிய உயிர்
ஒரு அடிதான்
முன்னால் வைப்பேன்
ஒரு யானை
எதிரில் வந்தாலும்கூட
பின்னால் ஓடமுடியாது என்னால்
ஒரு அடி முன்னால் வைக்க
என்னைப்போல் ஒரு எளியவனை
நான் கொள்ள வேண்டும்
அப்படியும்
ஒரு அடி முன்னே வைப்பேன்
உனக்கோ
நீ திரும்பும் திசையே
உனது வழி
அதில் யாரும்
நிற்பதும் கூட இல்லை
உனது திட்டங்களோ
எனது 'ஒன்றிக்கொன்று'
புத்திக்கு புரிவதேயில்லை
இருந்தும் உன்னை நோக்கி
ஒரு அடி முன்னே வைப்பேன்
எங்கிருந்தோ 'ட' வெனப்பாயும்
உனது குதிரையின் குழம்படியில்
ஒருவன் சதைந்து போகிறான்
அதன் அருகிலேயே நான்
ஒரு அடி முன்னே வைப்பேன்
எங்கு நீ நகர்ந்தாலும்
உனது கொலைவாளின் கூர்மை
அரசனை நோக்கியே இருக்கிறது
அதனால் எளிய சிப்பாய் நான்
ஒரு அடி முன்னே வைப்பேன்
எந்த பதற்றமுமின்றி
நான் தீண்டும் திசைதனில்
வந்து நிற்கிறாய்
இதோ உனது அருகாமையின்
அடுத்த அடியை வைக்கிறேன்
உனை அண்ணாந்து நோக்கியபடி
இன்னும் என் கண்களை சந்திக்காத
உனது இடதுகால் சிறுவிரல்
என் தலையை
சுண்டிவிடும் தூரத்தில்
மெல்ல,
எனதாயுதத்தின் கைப்பிடியை
அழுந்தபற்றியபடி
இன்னும்
ஒரு அடிதான்
…………..
செடிகளை
பார்த்துக்கொள்பவள்
வீட்டை பூட்டிவிட்டு
நாங்கள் தூரமாய்
வந்திருந்தோம்
வீட்டுச்சாவி அடுத்தவீட்டுப்
பெண்ணிடம் இருக்கிறது
அவள்தான்
செடிகளுக்கு தினமும்
தண்ணீர் விடுகிறாள்
வீட்டை அவற்றுக்குக்
கொஞ்சம்
திறந்து காண்பிக்கிறாள்
யாரும் பறிக்காமல்
மலர்ந்து கிடைக்கும் பூக்களின்
புகைப்படங்களை அவள்தான்
தினம் எங்களுக்கு
அனுப்பித்
தருகிறாள்
செடிகளை வாடாமல்
பார்த்துக்கொள்பவளுக்கு
என்ன பரிசு வாங்கிச்செல்லமுடியும்?
நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம்
தினம்தினம் நாங்கள்
நீரூற்றிப் பார்த்திருந்தும்
பூத்திராத பன்னீர் ரோஜா ஒன்று
இன்று அவளனுப்பிய
புகைப்படத்தின்
ஒரு மறைவிடத்தில்
முதன்முதலாக பூத்திருந்தது
………………..
பொருள்
ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்
சரியான இடத்தில
அமர்ந்தவுடன் ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது
ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொள்கிறது
நீண்ட இரவின் தவத்திற்குப் பின்
மலர்கிறது ஒவ்வொன்றும்
அதனதன் இடத்திலேயே
இனி இந்த தவத்தை
கலைக்கமுடியுமா
எந்த பக்கம் திரும்பினாலும்
அவை
ஒளியையே காட்டுகின்றன
……………….
வளரும்வரை
பொறு
நீ வீணே
வந்துவந்து
வானை பார்த்து திரும்பாதே
மொத்த நட்சத்திரங்களையும்
ஓர் அறையில்
நான்தான்
பூட்டிவைத்திருக்கிறேன்
அதன் சுவிட்ச்
இப்போது எனக்கு எட்டவில்லை
செரில்
அம்மா உட்கார்ந்து இருக்கிறாள்
Comments
Post a Comment