இலக்கியத்தில் மீபொருண்மை – சீரா

 

இந்த அரங்கிற்காக வாசிக்க வேண்டிய கவிதைகளும், சிறுகதைகளும்:

 

பிரமிள் கவிதைகள்:

1.தெற்குவாசல்

தெற்குக் கோபுர வாசலுக்கு

வந்த உன்முன் உனது

இடப்புறமாக நிற்கிறான்

காலபைரவன்.

பூணூலில் அவன்

கோர்த்தணிந்திருக்கும்

பொக்கிஷங்களைப் பார்.

பூக்களல்ல, புஷ்பராகக்

கற்களல்ல,

கபாலங்கள்.

ஒவ்வொரு கபாலமும்

பார்ப்பானில் இருந்து

பறையன்வரை

ஐரோப்பியனில் இருந்து

ஆப்பிரிக்க நீகிரோப்

பழங்குடி வரை,

ஒவ்வொரு மனித

இனப்பிரிவினை காண்.

நேர்கொண்டு பார், சிலையின்

கால்களுக்குப் பின் நாயாய்

உறுமுகிறது மரணம்.

அது, காலத்தின் வாகனம்.

காலபைரவனின்

சிரசில் அணிந்த

நெருப்புக்கிரீடமாய்

நின்று எரிகிறது

சரித்திர நியதி. அவன்

ஏந்தி நிற்கும்

சிவாயுதங்களிலும்

நடுங்குகிறது அதன்

நிர்மூல கதி.

டமருவில் பிறந்தது

நாதம்; நாதத்தில்

பிறந்த விந்து

கலைகளாய் விரிந்து

கால தேசங்கலாயிற்று.

தேசங்கள் காலத்தின்

நேற்றின்று நாளை என்ற

மூவிலைச் சூலத்தில்

கிழிபட்டுக் குலைந்து

அழிந்து

கொண்டிருக்கின்றன,

இடையில் கலைமான்

உள்முகம் நோக்கி

ஓடிக்கொண்டிருக்கிறது.

தெற்கே வந்த உன்முன்

நிற்கிறது காலம்.

நிர்வாணமாய்

நேர்கொண்டு பார்க்காமல்

நீ தப்ப முடியாது.

உன் கண்களைச் சந்தித்த

கருணையில் குரூரத்தில்

ஊடுருவி உள்ஓடிப்

பிறக்கிறது காலத்தின்

புரியொணாப் புன்னகை.

உன் உடலில் அருவருத்து

உள் ஓடிப் புரள்கிறது

உனைவிட்டுப் பிரியாத

மரணத்தின் பூணூல்.

உன் உயிரை நேர்நோக்கி

பரிகஸிக்கின்றன

காலங்கள்.

கத்திமுனையாய்

துப்பாக்கியில் வெடித்துச்

சுழன்று வரும் குண்டாய்

உற்பாதங்கள் தந்து,

உருக்குலைக்கும் நோயாய்

உடன்கூடிப் படுத்தவளின்

புணர்ச்சி விஷமாய்

தெற்குக் கோபுரவாசலில்

நிற்கிறது காலம்

நிர்வாணமாய்.

காலிடறும் கல்லும்

ஒரு நாளில்லை ஒருநாள்

காலனுருக் கொள்ளும்-

ஓ, ஓ, மானுட!

ஓடாதே நில்!

நீ ஓட ஓட

தொடர்கிறது கல்;

நாயாக உன்

நாலுகால் நிழலாக,

நீ ஓடஓட

தொடர்கிறது அக்னி;

ஓயாத உன்

உயிரின் பசியாக.

நீ ஓட ஓட

தொடர்கிறது இடைவெளி;

சாவாக நீ

இல்லாத சூனியமாய்.

கற்பிதத் திளைப்பில்

நீ நின்ற கணம்

மனம் தடுமாறி நீ

சிருஷ்டியைப் பிரதி

பலித்த அவ்வேளையில்

எதிரே நிற்கும்

கவிதையே காலம்.

அறிவார்த்தத் திகைப்பில்

நீ நின்ற கணம்

திசைத் தடுமாறி உன்

அறிவு திருக

எதிரே எழுகிறது

காலத்தின் விபரீதக்

கருத்துருவக் கோலம்.

உனக்குள் ஓய்ந்து

நீ நின்ற கணத்தில்

உள்வெளி மாற்றி

இக்கணத்தில் மடிகிறது

காலமாய் வக்கரித்த

ஞாபக லோகம்.

நின்று நேர் கொண்டு

நோக்கிய கணத்தில்

நீ கண்டதென்ன?

தெற்குக்கோபுர வாசலில்

நியதி நெருப்பைச்

சிரசில் அணிந்து

நிற்பது நீதான்.

நீ அற்ற சூனியத்தில்

நிற்கின்ற பிரக்ஞைக்குள்

விழுகின்ற தத்துவ

நிழல் உன் பாலம்.

உனக்குள் உன்

உயிரென நீ

உருவேற்றிக் கொள்வதுவோ

உயிரல்ல, காலம்.

எனவே, எட்டாத

வெற்று வெளி ஒன்றில்

ஓயாத திகிரியை

மென்சிறகலைத்து

ஓட அசைத்தபடி

ஆடாமல் அசையாமல்

பறப்பது நீயல்ல

நானல்ல,

காலாதீதம்.

தெற்குக் கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற

கல்.

2.வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்

 

தபாலில் வந்தது-
செந்தாமரையில்
சீட் பிடித்துக் கைகாட்டி
அருள் பாலிக்கும்
தெய்வத்தை அச்சிட்ட
சீப்பான காலண்டர் அல்ல.
காலம் சரசரத்து
ஓட விரியும்
டைரியும் அல்ல.
தபாலில் வந்தது
ஊர்பேர் அற்ற
தனித்துவம் ஒன்று.
“என்னை உனக்குத்
தெரியாது“ என்று
மைடியர் கூட
இல்லாமல் துவங்கி
“உன்னை எனக்குத்
தெரியும்“ என
முடிந்தது கடிதம்.
ஊர்தேதி கையொப்பம்
அனுப்புநர் முகவரி
எதுவுமே இல்லை.
தபால் தலையில் மட்டும்
ஜே.கே.ஜாக்பாட்
என்றொரு சீல்.
ஈதென்ன பைத்யம்
என்றொரு பிச்சுவாய்
காற்றாட வாக்போய்
பு.பி.க்குப் பிடித்தது
காபி என்று
குடித்து முடித்து
சிகரெட் யக்ஞத்தை
நடத்தத் துவங்கினேன்.
புகையிலைச் சுருளைப்
பிடித்த நெருப்பில்
இன்மையின் இருப்பு.
ஜடத்தின் உயிர்ப்பில்
உள்வாங்கும் பிழம்பு.
பிழம்பு புகைந்து
என்னுள் விகசித்து
உள்வெளி ஆயிற்று.
வெளியே சிலிர்த்த
சிகரெட் புகையில்
இலையும் உடலும்
இல்லை உண்டென
இணையும் ரஸவாதம்.
சிகரெட் புகைதான்
இருந்தும் அதுதான்.
புலனுக்கும் புலனெட்டாப்
பரிமாணங்களுக்கும்
இடைவெளிகளிலே
திரிந்துகொண்டிருந்தேன்.
வெளிதோறும் நின்றது
ஒருகணப் பொறி.
கையொப்பமின்றி
அனுப்புனர் பெறுநர்
முகவரி இன்றி
காலமும் இன்றி
அண்டத்தை அளாவி
நின்றது தனித்துவம்

 

நகுலன் கவிதைகள்:

 

1.ஸ்டேஷன்

 

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை

என்பதை;

" அது ஸ்டேஷன் இல்லை "

என்று நம்புவதிலிருந்து

அவனால் அவனை

விடுவித்துக் கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது.

 

 

2.பார்த்தேன்

என் நாற்காலியில்

இருந்துகொண்டு

ஒரு பிடிபடாத வேளையில்

இதை எழுதிக்கொண்டே

இருந்தவன்

மனம் அசைபோட

அகஸ்மாத்தாகக்

கீழே

நாற்காலி அருகில்

அந்த மஞ்சள் நிறப் பூனை

என்னையே

பார்த்துக்கொண்டிருப்பதைப்

பார்த்தேன்.

 

3.கோட்ஸ்டாண்டு கவிதைகள்:

 

அன்றிரவு அவன்

ஒரு கனாக் கண்டான்

வெகு நேரம்

கோட்  ஸ்டான்டில் தொங்கிக்

கொண்டிருக்கும் உடலையே

பார்த்துக் கொண்டு நின்றான்

அதைக் கழற்றிக்

கோட்  ஸ்டான்டில்

தொங்கவிட்டு விட்டான்

என்பது என்னவோ சரி.

ஆனால்

அவன் இப்பொழுதெல்லாம்

காணாமல் போன

தன் நிழலையே

தேடிக்கொண்டிருக்கின்றான்

நிழல்கள் மாத்திரம்

எங்குமே இருப்பதில்லை;

இங்கு கூட என்று இல்லை;

அங்கும்

 

4. யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்து கொண்டிருக்கிறது

எல்லாம்.

 

ஜெயமோகன் சிறுகதைகள்:

1. சிவமயம்

 

2. சடம்

 

சிவவாக்கியர் பாடல்கள்:

 பாடல் 197:

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டுகொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லிரேல்
முட்டுமற்று கட்டுமற்று முடியினின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருத்தவீட தாகுமே.

 

விளக்கம்:

முட்டென்று சொல்லப்படுந் தூமையானது மாதங்களில் வரத் தடைப்பட்டு அதினாலுண்டான சீவனை இருக்கக்கட்டி வைத்திருக்கின்ற இடத்தைத் தாண்டிப் பார்க்க வல்லமை உடையீரானால் முன் சொன்ன முட்டும் கட்டுமற்று முடிவிடத்திலிருந்த தலைவனை அஷ்ட திக்குகளிலும் தன்னுடைய அனுபவதிலிருந்த வீடு கைகூடும்.

பாடல் 202:

உருக்கலந்த பின்னலோ உன்னை நானறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே.

 

விளக்கம்:

நான், நீ என்னுடைய தேகத்தில் வந்து என்னுடன் கலந்த பின்னல்லவோ உன்னை இன்னாரென்று உணர்ந்தது. அப்படி இருப்பதால் சர்வ உயிர்களும் நினைத்திருந்த போதெல்லாம் நான் நினைத்திருந்தாலென்ன? மறந்தாலென்ன? நீ எப்பொழுது என்னுடைய உருவிற் கலந்தனையோ அப்பொழுதே நானும் நீயும் ஒன்றாவோமல்லவா? அப்படி இருந்தும் இந்த விஷயத்தை நான் உன்னுடைய திருவருள் கலந்தபோதல்லவோ உணர்ந்தேன்.

 

Comments

Popular posts from this blog

தமிழ் வரலாற்று புதிர்கள் - ராஜமாணிக்கம்

ஆனந்த் குமார் கவிதைகள் - நிக்கிதா

இலக்கியத்தில் மலர்கள் - லோகமாதேவி