கம்ப ராமாயணப் பாடல்கள்
கைகேயி சூல்வினைப் படலம் கதை சுருக்கம்
தசரதனின் மூன்று மனைவிகள் கோசலை, கைகேயி, சுமத்திரை. இதில் கைகேயியைப் பற்றிய கதை வால்மிகி இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் 70 வது சரகத்தில் 28 வது வரியில் கைகேயி யுதஜித் மன்னனின் தங்கை என்ற குறிப்பு வருகிறது. யுதஜித் கேகய நாட்டு அரசன். கேகய நாடு அயோத்தியில் இருந்து ஏழு நாள் பயணத் தொலைவில் உள்ளது.
தசரதர் வரமளித்தல்:
தேவர்களுக்கும் அசுரகளுக்குமான போரில் தசரதர் தேவர்கள் பக்கம் சேர்ந்துக் கொண்டார். தசரதரின் தேரில் கைகேயியும் இருந்தாள். தசரதர் இந்தரனுக்குத் துணையாக அசுரர்களுடன் போர் செய்தார். தேவர்களின் படை சம்பராசுரனின் படைகள் முன் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. அப்போது தசரதர் பத்து திசைகளில் ஒரே சமயத்தில் தேரைச் செலுத்தி அசுரர்களைத் தாக்கினார்.
தசரதர் பத்து திசையிலும் பல பல வேகத்தில் தேரைச் செலுத்தும் போது அவரது ரதத்தின் அச்சாணிக் கழண்டு விழுந்தது. இதனைக் கவனிக்காத தசரதர் போரில் மும்மரமாக இருந்தார். அப்போது கைகேயி அச்சாணிக்கு பதிலாக தன் பெருவிரலை ரதச் சக்கரத்துள் செலுத்தி தேர் சரிந்துவிடாமல் காத்தாள்.
போர் முனைப்பில் அதனை கவனியாத தசரதர் பின்னர் அறிந்து தன் மனைவியின் சாதூரியத்தையும், தைரியத்தையும் பாராட்டினார். அதன் பொருட்டு கைகேயிக்கு இரண்டு வரம் தர விரும்பினார். கைகேயி அதனைப் பின்னர் பெற்றுக் கொள்வதாக அப்போது தசரதரிடம் சொன்னாள்.
கைகேயி கேட்ட வரம்:
சிதையை மணம் செய்து வந்த இராமனுக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடானது. அப்போது கைகேயின் பணிப் பெண்ணாக மந்தாரை அவளிடம் வந்து பரதனை அரசனாக்கும் படியும், இராமனை வனவாசம் போகச் சொல்லும்படியும் வரம் கேட்டுகும் படி வேண்டினாள்.
முதலில் அதனை மறுத்த கைகேயி கூனியின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்க அதற்கு சம்மதித்தாள். தசரதரிடம் அவளுக்கு இரண்டு வரம் கொடுக்கும் படி வேண்டினாள். முதலில் அதனைக் கேட்டு மயக்கமுற்ற தசரதர். பின்னர் கைகேயி கேட்ட இரண்டு வரங்களைக் கொடுக்க சம்மதித்தார்.
***
அகலிகை சாப விமோசனம்
அகலிகை கல்லாய் இருப்பதை மூவரும் காணுதல்:
இனைய நாட்டினை இனிது சென்று,
இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின்
புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து, இழி
மாதவப் பன்னி,
கனையும் மேட்டு உயர்
கருங்கல் ஓர் வெள் இடைக் கண்டார்
உரை: இனைய நாட்டினில் - இத்தகைய மிதிலை நாட்டிலே; இனிது
சென்று - இனிய மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை -
மதில்களால் சூழப்பட்டுள்ள மிதிலை நகரை; புனையும்
அலங்கரிக்கின்ற; நீள்கொடிப் புரிசையின் - உயர்ந்த
கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே
வந்து தங்கினார்கள்; மனையின் மாட்சியை - (அவ்வாறு தங்கி)
இல்லறத்திற்குச் சிறப்பான கற்பினை; அழித்து இழி -
அழியச்செய்ததால் இழிவை அடைந்தன; மாதவப் பன்னி -
பெருந்தவத்தனான கௌதமரின் மனைவியான அகலிகையின்;
கனையும் மேடு உயர் - (சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து
தோன்றுகின்ற; கருங்கல் - கருங்கல்லாகக் (கிடப்பதனை); ஓர்
வெள்ளிடைக் - ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள்.
விசுவாமித்திரன் முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே
தங்கினர். அப்பொழுது கௌதம முனிவன் மனைவியான அகலிகை
அம்முனிவனின் சாபத்தால் கல்லாய்க் கிடக்கும் இடத்தைப்
பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும் வடசொல் பன்னி என
மருவியது.
அகலிகை பழைய நிலை திரும்புதல்:
கண்ட கல் மிசைக் காகுத்தன்
கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற,
வேறுபட்டு, உருவம்
கொண்டு மெய் உணர்பவன்
கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணம் ஆய் நின்றனள்;
மாமுனி பணிப்பான்.
உரை: கண்ட கல்மிசை - (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே; காகுத்தன்
கழல் துகள் - இராமனது திருவடித் துகள்; கதுவ - பட்டதால்; உண்ட
பேதைமை - (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய; மயக்கு
அற - இருள் மயக்கம் நீங்குமாறு; மெய் உணர்பவன் - உண்மையான
தத்துவ ஞானம் பெற்றவன்; வேறுபட்டு - தனது அஞ்ஞானமாகிய
அறியாமை நிலை மாறி; உருவம் கொண்டு - உண்மை வடிவம் (புது
ஞானஸ்வரூபி) அடைந்து; கழல் கூடியது ஒப்ப - பரமனது
திருவடிகளை அடைவதைப் போல; பண்டை வண்ணமாய் - (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு; நி்ன்றனள் - எழுந்து நின்றனள்;
மா முனி பணிப்பான் - (அதனைக் கண்ட) விசுவாமித்திரன்
இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.
அகலிகை நல்லுருவம் பெறல்: திருமாலின்திருவடி சேர்பவர் தம்
கருமம் ஒழிந்து இப் புன்மையான உடம்பை ஒழித்து ஒளிமிக்க
உருவத்தை அடைவதுபோல. இராமனது திருவடிப்பொடி சேர்ந்த
அளவில் இவளது சாபம் நீங்கியது. தனது கல்லுருவம் மாறி
முன்னைய நல்லுருவத்தைப் பெற்றாள். பேதைமை மயக்கு: அவிச்சை
(அஞ்ஞான) யின் தொடர்ச்சி. மெய்யுணர்தல்: பிறப்பு. இறப்பு.
வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்கள் நீங்கி
உண்மையாக அறிதல். முக்தி பெறுவார்நிலை: நிலம் முதலான
ஐம்பூதங்களாலான இந்தக் கரும வினையுடலை நீக்கி. ஒளிமிக்க
தெய்வீக உடம்பைப் பெறுதல் வான்மீகம் - மிதிலைக்கு அருகில்
செல்லும் போது ஆச்சிரமம் ஒன்று பாழடைந்து கிடப்பது குறித்து
இராமன் விசுவாமித்திரனைக் கேட்டான். அப்பொழுது அம் முனிவன்
அகலிகையின் வரலாறு கூறி. அந்த ஆச்சிரமம் செல்லுமாறு
வேண்டுகிறான். இராமனும் சாப விமோசனம் உண்டாகுமென்று கருதி
அங்கே சென்றான்.
அகலிகை சாப வரலாற்றை இராமன் கேட்டல்:
பொன்னை ஏர் சடையான் கூறக்
கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ்
உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு
ஒன்று முடிந்தது உண்டோ?
‘அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த
ஆறு அருளுக ‘என்றான்.
உரை: பொன்னை ஏர் சடையான் - பொன்னைப் போன்ற சடை
முடியுடைய கோசிக முனிவன்; கூறக் கேட்டலும் - இவ்வாறு
சொல்லியதைக் கேட்டவுடனே; பூமி கேள்வன் - பூமி தேவிக்கு
நாயகனான இராமன்; இவ் உலகு இயல் - (வியப்போடு அம்
முனிவனை நோக்கி) இந்த உலகத்தின் இயல்பு; இருந்த வண்ணம் -
இருந்த விதம்; என்னையே என்னையே - எத்தன்மையது!
எத்தன்மையது! முடிந்தது - இவ்வாறு நிகழ்ந்தது; முன்னை
ஊழ்வினையினாலோ - முற்பிறப்பில் செய்த வினையின் பயனாலோ?;
நடு ஒன்று உண்டோ - (அல்லது இதற்குக் காரணமாக) இடையிலே
நேர்ந்த ஒரு செயல் உண்டோ?; அன்னையே அனையாட்கு - தாய்
போன்ற அகலிகைக்கு; இவ்வாறு அடுத்தவாறு - இப்படி ஏற்பட்ட
காரணத்தை; அருளுக - கூறி அருளுக; என்றான் . என்று இராமன்
வேண்டினான்.
உலகத்தாயும் ஊழும்: அகலிகை தாய்போலக் குற்றம் அற்றவளாக
விளங்குகின்றாள். இத்தகைய தன்மையுடையவளுக்கும் கல்லாக மாறும்
நிலை ஏற்படுமா? அத்தகைய பரிதாபநிலை ஏற்படுமென்றால் இந்த
உலக இயல்பை என்னவென்று சொல்வது? இவ்வாறு இவள் உருவம்
மாறுபட்டதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? முந்தின
பிறப்பில் அமைந்த விதியா? அதுவல்லாமல் இப் பிறப்பில் ஏதேனும்
நேர்ந்தது உண்டோ? இக் காரணத்தை அறியுமாறு கூற
வேண்டுமென்று விசுவாமித்திரனை இராமன் கேட்கிறான். என்னையே!
என்னையே! வியப்பைக் குறிக்கும் அடுக்கு.
இந்திரன் அகலிகையை அணைத்திருத்தலும் கௌதமர் வருதலும்:
புக்கு, அவேளாடும் காமப்
புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும்,
உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள்,
தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல்
முனிவனும் முடுகி வந்தான்.
உரை: புக்கு - (இவ்வாறு இந்திரன் முனிவனது உருவம் (கொண்டு)
சென்று; அவளோடும் காமம் - அந்த அகலிகையோடு புதுக் கலப்பில்
அமைந்த காமமாகிய; புதுமணம் மதுவில் தேறல் - மணமுள்ள
மதுவின் தெளிவை; ஒக்க உண்டு இருத்தலோடும் - (இருவரும்)
சமமாக அனுபவித்து கொண்டிருக்கும்போது; உணர்ந்தனள் -
(தன்னோடு மகிழ்பவன் இந்திரனே என்ற) தவற்றை அறிந்தாள்;
உணர்ந்த பின்னும் - (அவ்வாறு) அறிந்த பின்பும்; தக்கது அன்று
என்ன - (இத்தீய செயல் தனக்குத்) தகுதியானதாக இல்லை என்று;
ஓராள் - சிந்தனை செயலுக்குத் தானும் மனம் பொருந்தியவளாக
இருக்க (அச் சமயத்தில்); தாழா முக்கணான் அனைய - (எந்த
வகையிலும்) குறைவு இல்லாத முக்கண்ணனாகிய சிவனை ஒத்துள்ள;
ஆற்றல் முனிவனும் - வல்லமை நிரம்பிய அம்முனிவனும்; முடுகி
வந்தான் - (தாழாமல்) விரைவாக மீண்டு தன் ஆச்சிரமம் வந்தான்.
அகலிகையும் இந்திரனும்: கௌதமன் உருவில் வந்த இந்திரனைத்
தன் கணவன் என்றே நினைந்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்
கையில் இது புது மண மது என்பதை உணர்ந்தாள்; அவ்வாறு
உணர்ந்தும் அவள் இது தகுதியன்று என ஆராய்ந்து விலக்கக் கூடிய
அறிவுத் திறனைப் பெறாமல் இழிந்த அச்செயலுக்கு உடந்தையாக
இருந்தாள். அவ்வேளையில் முனிவன் விரைந்து வந்தான். ஏனெனில்.
தான் எழுந்து புறப்பட்டுப் போனது நள்ளிரவு என்றும். அவ்வாறு
தான் செல்வதற்கு இந்திரன் வஞ்சனை செய்தான் என்றும். முனிவன்
தன் ஞான உணர்வால் அறிந்ததே ஆகும். காமப் புதுமண மதுவின்
தேறல்: பிறன் மனைவியை விரும்புதலும். கள்ளும். ஒழுக்கத்தையும்
நல்லுணர்வையும் அழிப்பதில் ஒன்றோடு ஒன்று ஒத்துள்ளன.
அதனால் இவ்வாறு கம்பர் உருவகப்படுத்தினார். முக்கணான் அனைய
ஆற்றல் முனிவன்: அழிக்கும் தொழிலை நிறைவேற்ற நெற்றிக்
கண்ணைத் திறந்துள்ள உருத்திர மூர்த்தியைப் போலச்
சினம்கொண்டவனானான் கௌதமன்.
***
Comments
Post a Comment